
அதிக கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் அதிக அளவு மழை பொழிய வாய்ப்புள்ளதால் மண் சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டு உள்ளார். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஆர்டிஓ மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் இங்கு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.