
கான்பூரில் இறந்த தந்தையின் உடலை அவரது 5 மகள்கள் தோளில் சுமந்து சென்றதுடன், அவரது கடைசி விருப்பதையும் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆர்.கே.திவாரி. இவர் ஐஐடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பிரியங்கா, பூனம், கீதாஞ்சலி, வசுதா மற்றும் பாவனா ஆகிய ஐந்து மகள்கள். சிறிது காலமாக திவாரி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஆர்.கே.திவாரி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவர் தனது உடலை கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தானம் செய்திருந்தார்.
இதையடுத்து திவாரியின் உடலை அவரது நான்கு மகள்கள் சுமந்து சென்றனர்.ஒரு மகள் கண்ணீர் மல்க சங்கு ஊதியவாறு சென்றார். இந்த காட்சியைப் பார்த்து கான்பூர் நகர மக்கள் கண்கலங்கி அழுதனர். பெண் பிள்ளைகள் தங்கள் தந்தையின் விருப்பப்படி, அவரது உடலை கான்பூர் மருத்துவக்கல்லூரிக்குக் கொண்டு சென்றனர். இதற்காக, யுக் தாதிச்சி சன்ஸ்தாவின் நிறுவனர் மனோஜ் செங்கரைத் தொடர்பு கொண்டனர். அந்த அமைப்பு முழு செயல்முறையையும் முன்னெடுத்துச் சென்று கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சஞ்சய் கலாவுடன் ஒருங்கிணைத்து உடல் தானத்தை வெற்றிகரமாக்கியது. அங்கு சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. உயிரிழந்த திவாரியின் உடலுக்கு கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.