
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 காவலர்கள் உள்பட ஐந்து பேர் உயிரிந்தனர். இதன் பின் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பேங் சூ மாவட்டம், சடுசங் பகுதியில் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இன்று இந்த சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்மநபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். மேலும், அங்கிருந்த ஒரு பெண்ணையும் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் காவலர்கள் நான்கு பேரும், ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். இதன்பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் யார்? துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்று பாங்காக்கின் பேங் சூ மாவட்ட காவல்துறை அதிகாரி சனோங் சேங்மானி கூறினார்.