சென்னையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார். அவருக்கு வயது 92.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் 1933-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பிறந்த ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன். சென்னிமலையில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்; தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவரான ஈரோடு தமிழன்பன் மரபுக் கவிதைகள் மற்றும் புதுக்கவிதைகள் இரண்டிலும் ஆகப் பெரும் தனி முத்திரையை பதித்தவர் வணக்கம் வள்ளுவ என்ற கவிதை நூலுக்காக 2004-ம் ஆண்டு ஈரோடு தமிழன்பன் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவரான ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கப் பற்றாளர் ஆவார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


