கோவை, மதுரையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளன.
கடந்த ஆட்சியை விட குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கற்பழிப்பு சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றில் தான் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நேற்று கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட்டில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார். இருந்தபோதிலும் பிரதமர் மீது குற்றம் குறை கூறி வருகின்றனர். கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. மாறாக திருப்பி அனுப்ப கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கோவை பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை.
இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கையை திருப்பி அனுப்ப அறிவுறுத்தி உள்ளது. கோவையில் ரயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த வேலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கருப்பு கொடி காட்டுகிறார்கள். அமெரிக்க அதிபரையே வந்து பார் என்று கூறுபவர் பிரதமர் மோடி. அவரால் முடியாதது எதுவுமில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்” என்றார்.


