கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டினால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினர் அதே பாணியில் போராட்டம் நடத்துவார்கள் என்று வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (நவம்பர் 19) தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் இன்று மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர். வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவது; மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்களை பறக்கவிடுவது என எந்த ஒரு போராட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது; அப்படி தமிழ்நாடு அரசு அனுமதித்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினரும் அதையே செய்வார்கள் என்று கூறியுள்ளார்.


