தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் இன்று (நவம்பர் 5) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்,
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கொள்கை தலைவர்களுக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது.
இதன் பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அதற்குள் கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும்.
மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தவெக தலைவருக்கும், அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அத்துடன் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும், அவர் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவிற்கும், அக்கட்சி தலைவர் விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்ததால், அக்கட்சி தங்கள் கூட்டணிக்கு வந்து விடும் என்று அதிமுகவினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இதன் மூலம் கூட்டணி வலுப்பெற்று விடும் என பாஜக நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக- பாஜக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது.


