வகுப்பு நேரத்தில் மாணவிகளை கால்களை அமுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக அரசு பள்ளி ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஒய்.சுஜாதா. இவர் நேற்று வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, செல்போன் பேசிக் கொண்டிருக்க இரண்டு மாணவிகள் அவரது கால்களைப் பிடித்து மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளஙகளில் வைரலானது. இது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பழங்குடி மாணவிகளை கட்டாயப்படுத்தி கால்களை அமுக்கச் சொன்ன ஆசிரியை ஒய்.சுஜாதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வகுப்பு நேரத்தில் மாணவர்களை கால்களை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியை ஒய்.சுஜாதா காலவரையின்றி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு நிறுவனம் (ITDA) சீதம்பேட்டா திட்ட அதிகாரி பவார் ஸ்வப்னில் ஜகன்னாத், ஆந்திரப் பிரதேச சிவில் சர்வீசஸ் விதிகள்-1991-ன் படி இந்த இடைநீக்க உத்தரவை பிறப்பித்தார். மாணவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது, வகுப்பு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது மற்றும் தகாத முறையில் உட்கார்ந்திருப்பது (கால்களை நீட்டியபடி அமர்ந்திருப்பது) மற்றும் மாணவிகளை கால்களை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்துவது ஆகியவை அவரை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கான உடனடி காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சம்பவம் குறித்த விசாரணை முடியும் வரை மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆசிரியைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மாணவிகளை கால்களை அமுக்கச் சொன்ன பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியை தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


