லாரி மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் பதேபூர் சாலையில் நேற்று நள்ளிரவில் வேகமாக வந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அதற்குள் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அத்துடன் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் காருக்குள் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் படுகாயங்களுடன் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் கார் ஓட்டுநர் ஸ்ரீகாந்த் சுக்லா, பிரதீப் ரஸ்தோகி (60), அவரது மனைவி மாதுரி(58), நிதின் (45), நைமிஷ் (25), கிருஷ்ணா (15) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. பித்தூருக்கு செல்வதற்காக பிரதீப் ரஸ்தோகி காரை முன் பதிவு செய்துள்ளார்.
கார் ஓட்டுநர் தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த கோர விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


