ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான கூட்டு தேர்தல் அறிக்கை பாட்னாவில் இன்று வெளியிடப்பட்டது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர் நிதிஷ் குமார், எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான், பிஹார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்த பின்பு, 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். வெள்ள மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நதி இணைப்புத் திட்டங்கள், கரைகள் மற்றும் கால்வாய்கள் விரைவாக கட்டப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளம் இல்லாத பிஹார் என்று இலக்கு எட்டப்படும். இலவச ரேஷன், 125 யூனிட் இலவச மின்சாரம், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை, ரூ.5 லட்சத்தில் புதிய வீடுகள் மற்றும் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ஆகியவை உறுதியளிக்கப்படும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பல்வேறு சாதிகளின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்கும், அவர்களின் அதிகாரமளிப்புக்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பதற்கும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இதன்மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்கும். ‘மிஷன் கோடீஸ்வரர்’ திட்டம் மூலம் பெண் தொழில்முனைவோர் கோடீஸ்வரர்களாக மாற்றப்படுவார்கள். பாட்னா, தர்பங்கா, பூர்னியா மற்றும் பாகல்பூரில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும். இந்த நான்கு நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமைக்கப்படுவதோடு, ஏழு விரைவுச் சாலைகளை அமைக்கவும், 3,600 கி.மீ ரயில் பாதைகளை நவீனமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான இணைப்பு மேலும் 10 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் மற்றும் 10 புதிய தொழில்துறை பூங்காக்கள் கட்டப்படும். கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 100 சிறு, குறு தொழில் பூங்காக்கள் மற்றும் 50,000 க்கும் மேற்பட்ட குடிசை தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை 6,000 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்தப்படும். மீனவர்களுக்கான உதவி 4,500 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்தப்படும். மாநிலத்தின் விவசாய உள்கட்டமைப்பில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை அரசாங்கம் உறுதி செய்யும்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேஜி முதல் பிஜி வரை இலவச மற்றும் தரமான கல்வி, பள்ளிகளில் மதிய உணவுடன் சத்தான காலை உணவு ஆகியவை வழங்கப்படும். பட்டியல் சமூக பிரிவு மாணவர்களுக்கு குடியிருப்புப் பள்ளிகள் திறக்கப்படும். உயர்கல்வி பயிலும் பட்டியல் சமூக மாணவர்களுக்கு 2,000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். சீதை பிறந்த இடம் ‘சீதாபுரம்’ என்று அழைக்கப்படும். அது உலகத் தரம் வாய்ந்த ஆன்மீக நகரமாக மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


