மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி.ராஜா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பிஹார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியிலேயே, பிரதமர் மோடி, தமிழகத்தில், பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.
எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, ஸ்டாலின் வகிக்கும் முதல்வர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.


