ராமநாதபுரத்தின் இளம் சிங்கம் என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று. தனது 19-வது வயதிலேயே அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கி, ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார். அரசியலில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதையிலும், ஆன்மீகத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் சித்தர் ராமலிங்க அடிகள் அவர்களின் பாதையிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட மாபெரும் தலைவர் அவர்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின்போது உருவாக்கப்பட்ட ‘குற்றப்பரம்பரைச் சட்டத்தை’ ரத்து செய்யப் போராடி வெற்றி கண்டார். அன்றைய அரசியல் சூழலில் ‘ராமநாதபுரத்தின் இளம் சிங்கம்’ என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர். இன்றைய தினத்தில், ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.


