தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்பு இருந்ததாக மென்பொருள் பொறியாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் அல்கொய்தா போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும, இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) புணேயின் மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளது. அவர் புணே நகரில் உள்ள கோந்த்வாபகுதியைச் சேர்ந்த ஜூபைர் ஹங்கர்கேகர் (35) என்பவராவார். இதையடுத்து அவரது வீட்டில் ஏடிஎஸ் குழு சோதனை நடத்தியது. அப்போது அவரின் லேப்டாப் உள்பட மொத்தம் 19 லேப் டாப்புகள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை சோதனை செய்த போது, ஜூபைர் ஹங்கர்கேகர் தடை செய்யப்பட்டபாகிஸ்தானின் அல்கொய்தா போன்ற அமைப்புகள் தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜூபைர் ஹங்கர்கேகரை கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்திய விசாரணையை அடுத்து சென்னையில் இருந்து புணே ரயில் நிலையம் வந்த சென்னை எக்ஸ்பிரஸில் இருந்து நான்கு சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்தது.
இந்த நிலையில், ஹங்கர்கேகர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மகாராஷ்டிரா மற்றும் பிற நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் கூறப்படுவதாக போலீஸார், சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அவரை நவம்பர் 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


