மதபோதகர்களை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் எஸ்.ஐ உள்பட 8 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தின் ஜூதானா பகுதியில் கிறிஸ்தவ மதபோதகர்களை உள்ளூர் மக்கள் சிலர் பிரசங்கம் செய்ய நேற்று அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் சில பிரசுரங்களை விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த கிறிஸ்தவ மதபோதகர்களை ஒரு வேனில் ஏறி செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் ரவீந்தர் சிங் தெல்லா தலைமையிலான குழு, போலீஸார் முன்னிலையில் லத்திகளால் மதபோதகர்கள் வந்த வாகனத்தின் கண்ணாடிகளை அறுத்து நொறுக்கினர்.
அத்துடன் அந்த கும்பல் சில மதபோதர்களையும் தாக்கியது. அங்கிருந்த போலீஸார், இந்த பிரச்னையின் போது தலையிடாமல் ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜ்பாக் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து மதபோதகர்களை மீட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், மதபோதகர்களை தாக்கியதை வேடிக்கை பார்த்ததாக ராஜ்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாகோல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு எஸ்.ஐ உட்பட எட்டு போலீஸாரை அதிகாரிகள் இன்று இடைநீக்கம் செய்துள்ளனர். அத்துடன் மத போதகர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து கதுவா எஸ்எஸ்பி மோஹிதா சர்மா கூறுகையில். ஒரு எஸ்.ஐ உள்பட 8 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள குற்றவாளிகை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூதானாவில் வசிப்பவர்கள், மத போதகர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். உள்ளூர் மக்களிடையே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய விஷயங்களை விநியோகிப்பதன் மூலம் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர். அப்பகுதியில் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த முழு குழுவையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கதுவா மாவட்டத்தின் நாக்ரி பகுதிக்கு அருகிலும் இதேபோன்ற போராட்டம் நடந்தது. அங்கு மதமாற்ற முயற்சித்ததாக மற்றொரு மத போதகர்கள் குழு மீது குற்றம் சாட்டப்பட்டது.


