விஷ சாக்லெட் கொடுத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபராக இருப்பவர் டேனியல் நோபோவா(37). இவர் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நோபோவா மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்து வருகிறார். அத்துடன் பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் ஒரு பொதுநிகழ்வில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அன்பளிப்பாக சாக்லெட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை சோதனை செய்த போது அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா கூறுகையில், இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. எனவே விஷ சாக்லெட் கொடுத்து என்னைக் கொல்ல சதி நடந்தது என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். அப்போது அவரது வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக டேனியல் நோபோவாவிற்கு காயம் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் அதிபரை கொல்ல நடைபெற்ற முயற்சி என ராணுவ அமைச்சர் கியான் கார்லோ லோப்ரெடோ குற்றம் சாட்டியிருந்தார். தற்போது சாக்லெட் மூலம் விஷம் கலந்து தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக டேனியல் நோபோவா குற்றம் சாட்டியுள்ளார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொல்ல சதி நடைபெற்றுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


