6 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சிங் ராஜவத். விவசாயி. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் கான்பூரில் உள்ள ஜே.கே. மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். கடந்த ஒரு மாதமாக தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில், சாப்பிடுவதற்காக மருத்துவமனை வெளியே இருந்த கடைக்கு ராஜ்குமார் சிங் ராஜவத் வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் அவரை ஒரு மர்மநபர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் சிங் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமார் சிங்கை திட்டம் போட்டு அவரது மருமகன் மோஹித் தோமர் கொலை செய்தது அம்பலமானது. ராஜ்குமார் சிங்கின் மகளை திருமணம் செய்த மோஹித்திற்கும், அவரது மாமனாருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அப்போது விரைவில் சிறைக்கு அனுப்புவேன் என்று மருமகன் மோஹித்தை ராஜ்குமார் சிங் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோஹித் தனது மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” ராஜ்குமார் சிங்கை கொலை செய்ய 6 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படை கொலையாளியை மோஹித் தயார் செய்துள்ளார். அதன்படி மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமார் சிங்கை கூலிப்படையை சேர்ந்தவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கூலிப்படையை ஏவி கொலை செய்ததை மோஹித் ஒப்புக் கொண்டுள்ளார். மாமனார் மட்டுமின்றி தனது மைத்துனரையும் கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கூலிப்படையைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளை மோஹித் திருமணம் செய்ததை அவரது மாமனார் ராஜ்குமார் சிங் ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்னையாக மாறியுள்ளது. இதன் காரணமாக கூலிப்படையை ஏவி மாமனாரையும், மைத்துனரையும் மோஹித் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தற்போது அவரது மாமனார் கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்குள் மோஹித் கைது செய்யப்பட்டுள்ளதால் இரண்டாவது கொலை தடுக்கப்பட்டுள்ளது” என்றனர். இந்த சம்பவம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


