தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் ஆறுகளில் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த நிலையில் கனமழை தொடரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த நிலையில், மீட்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
அதன்படி திருவள்ளூருக்கு கார்த்திகேயன் (மேலாண் இயக்குநர், எல்காட்), காஞ்சிபுரத்திற்கு கந்தசாமி (மேலாண் இயக்குநர், தாட்கோ), செங்கல்பட்டுக்கு கிரந்திகுமார் பாடி (மேலாண் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்), விழுப்புரத்திற்கு ராமன் ( இயக்குநர், தொழிலாளர் நலத்துறை), கடலுாருக்கு மோகன் ( இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிம வளம்), மயிலாடுதுறைக்கு கவிதா ராமு ( மேலாண் இயக்குநர், கோ – ஆப்டெக்ஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூருக்கு ஆனந்த் (ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை), நாகப்பட்டினத்திற்கு அண்ணாதுரை (மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்), தஞ்சாவூருக்கு கிருஷ்ணன் உன்னி ( நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்), கள்ளக்குறிச்சிக்கு வெங்கடபிரியா ( செயலர், மாநில தேர்தல் ஆணையம்), அரியலுாருக்கு விஜயலட்சுமி (ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி), பெரம்பலுாருக்கு லட்சுமி( ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை) ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


