தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவில் இருந்தே தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே, தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


