கரூரில் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.‘
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதியில் தவெக அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி அளிக்கப்படவில்லை. செப்டம்பர் 25-ம் தேதி லைட்ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை பகுதிகளில் அனுமதி கோரிய போதும், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடத்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மனு அளித்தார். அவரின் மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக காவல்துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணைகாவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 517 காவல் அதிகாரிகள் கரூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஒரு காவல் கணிப்பாளர். 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப்படை காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டனர். அன்றைய நாளில் பாதுகாப்பு பணிக்காக அதிகாரிகள், காவல்துறையினர் என மொத்தம் 606 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் தவெக செய்யவில்லை.
கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை கரூரில் செய்யப்படவில்லை. காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர். கரூர் பரப்புரையின்போது ஜெனரேட்டர் இருந்த தகரக்கொட்டகைக்குள் கூட்டம் புகுந்தது. மின்சாரம் தாக்குவதை தவிர்க்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை நிறுத்தியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் அதிமுகவின் கூட்டம் நட்டதுள்ளது. அங்கு கூடியவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது. 12 மணிக்கு கட்சித் தலைவர் வரவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பிலும், சமூக ஊடகங்களிலும் தெரிவித்திருந்தார். ஆனால், தவெக தலைவர் சுமார் 7 மணி நேரம் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்தது” என்றார்.


