திடீரென பெய்த கனமழையால் தங்கக்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலியானார்கள்
வெனிசுலா நாட்டில் தங்கம், செம்பு, வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகக் சுரங்கங்கள் நிறைந்துள்ளன. இதனால் இங்கு சட்ட விரோதமாக ஏராளமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக இயங்கும் இந்த சுரங்கங்களில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு நிறைய பேர் உயிரிழந்து வருகின்றனர்.
அப்படியொரு விபத்து கல்லோ நகரில் நடந்துள்ளது. வெனிசுலாவில் உள்ள கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கி.மீ தொலைவில் கல்லோ நகர் உள்ளது. இங்குள்ள தங்கச் சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெய்த கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். இந்த சுரங்கத்தில் 30 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். கனமழையால் சுரங்கம் இடிந்து 14 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


