கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பான கரூர் போலீஸாரின் விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிபிஐ விசாரணை கோரி உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை அக்டோபர் 10-ம் தேதி நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வு விசாரித்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமரியாக கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி கேட்டதால், இதனை ஏற்ற நீதிபதிகள் உத்தரவை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த சூழலில் இன்று காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதாக கூறியிருந்த, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் காணொலி வாயிலாக ஆஜராகினார். இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழிகாட்டு வழிமுறைகள் வகுக்க கோரிய மனு குற்றவியல் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.


