கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை மத்தியப்பிரதேச போலீஸார், சென்னை அசோக் நகரில் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்தியப் பிரதேசம் போலீஸார், அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்பா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு மற்றும் அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணா நகரில் உள்ள மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீடு, தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் தீபா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


