அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3.30 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் புகார் அளித்தார். இதன் பேரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
அதே நாளில் சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணிகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திரபாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் தடுப்பு சட்டத்தை வழக்கில் சேர்த்து விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


