மனைவியை கொலை செய்வதற்காக பிரிட்ஜ்க்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்களை மறைத்து வைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி மாவட்டத்தில் உள்ள பாக்பாத்தை சேர்ந்தவர் சலேந்திர குமாரின் மகன் நவீன் குமார். இவர் திருமணமானதில் இருந்து மனைவியை தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்வதுடன் அடித்து உதைத்துள்ளார். இதே போல சம்பவ நாளன்று கணவன், மனைவிக்குள் சண்டை நடந்துள்ளது.
அப்போது தண்ணீர் குடிப்பதற்காக நவீன் குமாரின் மனைவி பிரிட்ஜை திறந்துள்ளார். அதற்குள் காய்கறிகளுக்கு நடுவே ஒரு கவரில் 3 கைத்துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன்னைக் கொலை செய்யத்தான் கணவர் துப்பாக்கிகளை வாங்கி வைத்துள்ளார் என்று சந்தேகமடைந்தார்.
அங்கிருந்து தப்பி வந்து காவல்துறையினரிடம், தனது வீட்டின் பிரிட்ஜில் கணவர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து மகாவீர் சிங் தலைமையிலான காவல் துறையினர் நவீன் குமார் வீட்டிற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த பிரிட்ஜிற்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 22 தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், நவீன் குமாரை ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மனைவியை கொலை செய்வதற்காக நவீன் குமார் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண கிராமத்து வீட்டிற்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டது போலீஸாரிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கிகளை பதுக்கியதை ஒப்புக்கொண்ட நவீன் குமார், டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இந்த கைத்துப்பாக்கிகளை வாங்கியதாக கூறினார். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ளவர்களை பயமுறுத்த வாங்கியதாக அவர் கூறினார். இதையடுத்து டெல்லியில் இருந்து பாக்பத்திற்கு துப்பாக்கிகளை கொண்டு வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத ஆயுத வழக்குகளில் தொடர்புடைய சிலரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நெட்வொர்க் ஹரியாணாவில் இருந்து செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட நவீன்குமார் தனது மனைவியை கொலை செய்ய முயன்றதால், காவல்துறையினர் அவரை பாதுகாப்பு மையத்தின் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


