சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரமாக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கம் காவல் துறையில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். இதன்பேரில் கிடந்த 2011-ம் ஆண்டு சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டு சீமான் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி கடிதம் வழங்கியிருந்தனர். ஆனால், விஜயலட்சுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜயலட்சுமியிடம் சீமான் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கோரத் தவறினால் அவரை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்தினா, மகாதேவன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில், விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் எந்த காரணத்திற்காகவும் விஜயலட்சுமியை தொடர்பு கொள்ள மாட்டேன். தேவை ஏற்படும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் வாயிலாக மட்டுமே தொடர்பு கொள்வேன் என்று உறுதியளிப்பதாக சீமான் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சீமான் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தனது கண்ணியத்தை மீட்கும் என்பதால் சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயார் என்று விஜயலட்சுமி தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பாலியல் புகார் வழக்கில் இருந்து சீமான் தப்பியுள்ளார்.


