உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று காலை ஒரு அமர்வில் விசாரணையில் இருந்தார். அப்போது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் திடீரென உச்சநீதிமன்ற தலைம நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி ஒன்றை வீச முயற்சித்தார். அவரை காவலர்கள் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது சனாதன தர்மத்திற்கு அவமதிப்பு செய்வதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று கூச்சலிட்டபடியே சென்றார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த போது , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த நபர் உடனடியாக விசாரணை அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய், எந்த பதற்றமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களை தொடருமாறு கேட்டு கொண்டார். ”இதற்கெல்லாம் கவனம் சிதற தேவையில்லை. இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


