கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் தான் முதல் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பாஜக உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது? தேர்தல் வருவதால் பாஜக எம்.பிக்கள் குழு கரூர் வந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார். அவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டது. கரூர் மரணங்கள் குறித்து நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தான், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தினார். அவர் தாக்கல் செய்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய்யே முதல் காரணம். ஏனெனில், கரூரில் அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே காவல்துறைக்கு நன்றியைத் தெரிவித்து தான் பேசினார். ஆனால், தற்போது மாற்றி மாற்றி பேசுகிறார். 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை என்று கூறினார்.


