வடக்கு எத்தியோப்பியாவில் இன்று அதிகாலை கட்டுமானப் பணியின் போது திடீரென தேவாலய சாரம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் மென்ட்சார் சென்கோரா அரேர்டி மரிஜாம் தேவாலயத்தின் கட்டுமானப் பணி இன்று காலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. புனித மேரியின் வருடாந்திர கொண்டாட்டத்திற்காக தேவாலயத்தில் வழிபாட்டிற்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த சாரம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடியுள்ளது.
“நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடினோம், ஆனால், திடீரென்று சாரக்கட்டு இடிந்து விழுந்தது. இதில் எனது மூன்று நண்பர்களை இழந்து விட்டேன் என்று மிகியாஸ் மெப்ராட்டு என்பவர் கூறினார். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உள்ளூர் நிர்வாகியான டெசலே திலாஹுன் கூறினார்.


