டெல்லியில் கைது செய்யப்பட்ட சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டிக்கள், பாலியல்(செக்ஸ்) பொம்மை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு வருகிறது. இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகளும் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். இதன் இயக்குநரான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி ( 62) என்ற பார்த்தசாரதி, மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு நேரத்தில் அழைத்து பாலியல் சீண்டல், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல், உடல் ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொண்டார் என 17 மாணவிகள் இந்த சாமியார் மீது வாக்குமூலம் கொடுத்தனர்.
மேலும்,ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுடன், அவருக்கு ஏற்றாற்போல நடந்து கொள்ளும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். இதில் சில பெண் பணியாளர்களும் இருந்தனர் என பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை போலீஸார் பதிவு செய்தனர்.
இதையடுத்து தலைமறைவான சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உள்ள ஓட்டலில் வைத்து செப்.28-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையில், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், டெல்லி போலீஸார், சைதன்யானந்த சரஸ்வதி வீட்டை நேற்று சோதனையிட்ட போது அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பாலியல் உறவுகள் தொடர்பான பொம்மைகள் மீது சாமியாருக்கு ஆர்வம் இருந்துள்ளது. அப்படியான பொம்மை ஒன்று அவரது அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து தலைவர் ஒருவர் ஆகிய 3 பேருடன் ஒன்றாக இருப்பது போன்ற போலி புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர். இவற்றை தன்னைச் சந்தித்தவர்களையும் கவர சாமியார் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே இவரிடமிருந்து ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கான நிரந்தர தூதர் என்றும், பிரிக்ஸ் குழுவிற்கான சிறப்பு தூதர் என்றும் அடையாளப்படுத்தும் வகையிலான போலி விசிட்டிங் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று உத்தராகண்டின் பாகேஷ்வர் மற்றும் அல்மோரா நகரங்களிலும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சாமியாருடன் பெண் சிஷ்யைகளும் உடனிருந்தனர்.


