கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், அதனையும் மீறி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம், மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


