கரூரில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினார். இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார். 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியமூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்படி, பிரிவு 105 (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசரம் அல்லது அலட்சிய செயல்களுக்கு தண்டனை), பிரிவு 223 (பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. புஸ்ஸி ஆனந்தையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


