கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தும் அக்கட்சி நிர்வாகிகள் கேட்கவில்லை என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஃஐஆர்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் களமிறங்கியுள்ளார். இதற்காக சனிக்கிழமையன்று இரண்டு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்படி நேற்று முன்தினம் அவர் கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கரூர் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதில், உயிர்ச்சேதம் ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் தவெக நிர்வாகிகள் நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை. கூட்டத்தை அதிகப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்குடனே விஜய் வருகை 4 மணி நேரம் தாமதமாக்கப்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்ததால் தொண்டர்கள் மற்றும் மக்கள் வெயில் மற்றும் தாகத்தால் சோர்வடைந்தனர்.
அத்துடன் பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை. போலீஸார் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர் மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். போதுமான அளவு தண்ணீர், மருத்துவ வசதி இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு அடைந்தனர். கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். நிபந்தனைகளை மீறியும், கால தாமதம் செய்தும் தவெக நிர்வாகிகள் இடையூறு செய்தனர். கரூரில் அனுமதியில்லாமல் ரோடு ஷோ நடத்தினர்.
கரூருக்கு மதியம் 12 மணிக்கு விஜய் வருவதாக தவெக அறிவித்ததால் அதிகமான கூட்டம் கூடியது. தொண்டர்கள் போலீஸார் சொல் பேச்சைக் கேட்காமல் மரத்தில் ஏறியதால் மரக்கிளைகள் முறிந்தும், தகர கொட்டகை சரிந்தும் பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெரிசல் விபத்து தொடர்பாக நாமக்கல் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாங்கள் சொன்னதை காதில் வாங்காமல் தொடர்ந்து அசாதாரண சூழலில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஈடுபட்டார். கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்தார் என்று நாமக்கல் காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.


