கரூர் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் இரவு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக சர்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் நேற்று முறையீடு செய்யப்பட்டது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டுக்கு தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான கட்சியினர் சென்று இந்த முறையீட்டை தாக்கல் செய்தனர். இந்த முறையீடு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளதாக தவெக இணைப்பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும்.. திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. காவல் துறையினர் தொண்டர்கள் மீது அத்துமீறி தடியடி நடத்தினர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முறைப்படி மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியதை தொடர்ந்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சாரத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவைக் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனையில் என்னை அனுமதிக்க மறுத்து விட்டார்கள். சனிக்கிழமை கரூரில் செந்தில் பாலாஜி பற்றி விஜய் பேசிய போது தான் கற்கள், செருப்பகள் வீசப்பட்டு மின்சாரம் பாதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விசாரணை முடியும் வரை சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க, தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதற்கு காவல் துறை எந்த தடையும் விதிக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


