17 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த சாமியார்… அதிர வைக்கும் எஃப்ஐஆர்!

டெல்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவிகளை இரவு நேரங்களில் அழைத்து மிரட்டி பாலியல் ரீதியாக  சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேனேஜ்மென்ட் என்ற உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். சைதன்யானந்த சரஸ்வதி என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி, டெல்லி வசந்த் கஞ்சில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.

இவர் மீது பதினேழு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் உரையாடல் ஆகிய புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில், நிறுவன வளாகத்தில் போலீஸார் நடத்திய சோதனையில், சாமியர் சைதன்யானந்த சரஸ்வதி மீதான புகார் உறுதியானது. ஆகஸ்ட் 4-ம் தேதி வசந்த் கஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக டெல்லி காவல்துறையால் வழக்குகள் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

இப்புகார்களின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையின் போது, ​​ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவு (EWS) உதவித்தொகையின் கீழ் படிக்கும் 32 பெண் மாணவிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 17 பேர், சைதன்யானந்த சரஸ்வதி தங்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர். சில ஆசிரியர்களும், நிர்வாகிகளும் மாணவிகளை அவரது ஆசைக்கு இணங்க அழுத்தம் கொடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தனர்.

இதையடுத்து சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ” கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் சைதன்யானந்த சரஸ்வதியின் கொடுமைகள் குறித்து மாணவி ஒருவர் மற்றும் கல்லுாரியில் பயிலும் மற்றொரு மாணவியின் தந்தையான விமானப்படை அதிகாரி ஒருவர் ஸ்ரீ சாரதா பீடத்துக்கு கடிதங்களை அனுப்பினர்.

டெல்லி உயர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவியர் சிலரின் பெற்றோர் விமானப்படையில் பணிபுரியும் நிலையில், டெல்லி விமானப்படை தலைமையகத்தில் இருந்தும் புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, டெ ல்லி கல்லுாரிக்கு சென்ற ஸ்ரீ சாரதா பீடத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு பயிலும் 30-க்கும் மேற்பட்ட மாணவியரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், இரவு நேரங்களில் மாணவியரை சாமியார் தன் அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. மறுப்பு தெரிவிக்கும் மாணவியரின் கல்வியை அவர் சீர்குலைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கல்லுாரி வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. புகார் தெரிவித்த 32 மாணவியரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 16 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெறப் பட்டது. இதில், பலமுறை வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், மாணவியரை வலுக்கட்டாயமாக மிரட்டி தன்னுடன் சைதன்யானந்த சாமியார் அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. சாமியார் மாணவியருக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், படங்கள் உள்ளிட்டவை ஆதாரமாக பெறப்பட்டன.

இந்த விவகாரத்தில், சாமியாருக்கு உடந்தையாக இருந்த கல்லுாரி துணை முதல்வர் ஸ்வேதா உட்பட மேலும் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் கமிஷன் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள சாரதா பீட கல்லூரிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீஸார், தலைமறைவாக உள்ள சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, சைதன்யானந்த சரஸ்வதி சாமியாரை கல்லுாரி நிர்வாகத்தின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக ஸ்ரீ சாரதா பீடம் அறிவித்துள்ளது. அத்துடன் அரசின் கீழ் கல்லுாரி இயங்குவதால், படிப்பு குறித்து மாணவியரோ, பெற்றோரோ கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

    தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *