திருமணத்திற்கு புறம்பான உறவில் மனைவி இருப்பதாக நினைத்து தனது இரண்டு குழந்தைகளை கோடாரியால் தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷரணப்பா.இவருக்குத் திருமணாகி ஹேமந்த் (8), பார்கவ் (5) மற்றும் சான்வி (3) ஆகிய குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தையில் ஷரணப்பா சந்தேகமடைந்தார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மனைவி திருமணத்திற்குப் புறம்பான உறவு மூலம் மூன்று குழந்தைகளைப் பெற்றதாக மனைவியை சந்தேகப்பட்டதுடன், அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். அவரின் கொடுமை தாங்காமல் தனது மூன்று குழந்தைகளுடன் ஷரணப்பா மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, குழந்தைகளை வீட்டிற்கு ஷரணப்பா அழைத்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது மூன்று குழந்தைகளுக்கும் யாருக்குப் பிறந்தது என்று கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
நேற்று காலையில் ஷரணப்பா மனைவி இயற்கை உபாதைக்காக வெளியே சென்றார். அப்போது உறங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் ஷரணப்பா கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதனால் குழந்தைகள் அலறித் துடித்தன. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் ஷரணப்பா அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சான்வியும், பார்கவும் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். ஹேமந்த் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே வெளியே சென்றிருந்த ஷரணப்பாவின் மனைவி வீட்டுக்கு வந்தார். அப்போது தனது இரண்டு குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹேமந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தை யாதகிரி காவல் கண்காணிப்பாளர் பிருத்விக் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த கொடூரக்கொலைகள் குறித்து யாதகிரி புறநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஷரணப்பாவை தேடி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தனது இரண்டு குழந்தைகளை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


