கரூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி திமுகவில் சேர்ந்தது குறித்து ஜோதிமணி எம்.பி வெளியிட்ட பதிவிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கரூரில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நடக்கும் மோதலை பார்த்தால் தேர்தல்வரை தாங்குவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், கரூர் நகர காங்கிரஸ் மகள்ர் அணி தலைவர் கவித, திமுகவில் இணைந்து விட்டார் என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த கரூர் காங்கிரஸ் கட்சியினர், திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்று குமுறி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, கரூர் மக்களவை தொகுதி உறுபபினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ” சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.
திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது.
இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் மொழி,இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது பதிவை நீக்கி விட்டார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி திமுகவில் சேர்ந்ததால், அந்த கட்சி கூட்டணி தர்மத்தை மீறி விட்டது என்று சவுண்டு விடும் ஜோதிமணி எம்.பி, அதே திமுகவினரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்த போது என்ன செய்து கொண்டிருந்தார் என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமு அவரது முகநூல் பக்கத்தில் காட்டமான ஒரு பதிவை எழுதியுள்ளார்.
அதில், ” 2023-ம் ஆண்டு திண்டுக்கல் நாகல் நகர் சந்தைப்பேட்டையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. முன்னதாக பிற கட்சியினர் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இவர்களில் 47வது வார்டு திமுக முன்னாள் வார்டு அவைத்தலைவர் ராஜேந்திரன், திமுக முன்னாள் நிர்வாகிகள் அக்கீம், அஜித், அப்துல் ரகுமான் உள்ளிட்ட பல திமுகவினரும் உண்டு. இவர்கள் திமுகவில் இருந்து விலகி. விலகப்பட்டு இருந்தவர்களா அல்லது காங்கிரஸில் சேரும் வரை திமுகவில் தான் இருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால்ல், பத்திரிகை செய்திகளில் முன்னாள் திமுகவினர் என்று குறிப்பிடவில்லை. திமுக முன்னாள் நிர்வாகிகள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு சால்வை அணிவித்து காங்கிரஸ் கட்சியில் இணைத்தவர் அப்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தான். அப்போது திமுக, காங்கிரஸ் இரண்டும் கூட்டணியில் தான் இருந்தன. சொல்லப்போனால் அதற்கு முன் 2016 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்தன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வென்றார். இது நடந்தது 2023-ம் ஆண்டு. அதே ஆண்டு ஜூலை 17-ம் தேதிதான், திமுக பிரமுகர்களை தங்களது கட்சியில் இணைத்து கொண்டது காங்கிரஸ். அதுவும் மாநில தலைவரே வரவேற்றார். இதை திமுக கண்டு கொள்ளவில்லை. இதன் பிறகு வந்த இடைத் தேர்தல்களில் கூட்டணி தொடரத்தான் செய்கிறது. இது போலவே கடந்த ஆண்டும் நடந்ததை நண்பர் கூறினார். கூட்டணி கட்சியில் இருந்து ஆட்களை சேர்த்துக் கொள்வது அவமானம் என்றெல்லாம் ஆவேசப்பட்டு இருக்கிறாரே ஜோதிமணி அவருக்கு இதெல்லாம் தெரியாதா?” என்று பதிவிட்டுள்ளார்.


