
கேரளாவில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கூத்தாநடியைச் சேர்ந்தவர் ஐசக்(42). இவரது மனைவி ஷாலினி(39). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளி செல்வதற்காக ஆசிரியை குளிப்பதற்காக குளியலறை சென்றார். அப்போது அவர் பின்னால் சென்ற அவரது கணவர் ஐசக், ஷாலினியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஷாலினிக்கு கழுத்து, மார்பு மற்றும் முதுகில் கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து ஐசக், தனது ஃபேஸ்புக் லைவ் கணக்கில் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ததை நேரலையில் கூறியுள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதுடன், தனக்கு கீழ்படியவில்லை என்றும், தனது தாய் வீட்டிற்குச் சென்று விடுவேன் என்று கூறியதால் கொலை செய்தேன் என்று நேரலையில் கூறினார். இதன்பின் புனலூர் காவல் நிலையத்தில் ஐசக் சரணடைந்தார்.
தன் மனைவியை குத்திக்கொலை செய்ததாக அவர் கூறியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீஸார் விரைந்து சென்று ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தம்பதியினரின் 19 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையில், ஐசக் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வளைகுடாவிலிருந்து திரும்பிய ஐசக், ரப்பர் தட்டும் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஷாலினி அருகிலுள்ள பள்ளியில் பணிபுரிந்தார். தனது மனைவியின் நடத்தை மீது ஐசக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசக்கிற்கும், ஷாலினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மனைவியைத் தொடர்ந்து டார்ச்சர்செய்து ஐசக் தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட ஷாலினி தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். சமீபத்தில் தான் கணவர் வீட்டிற்கு ஷாலினி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது ஐசக் குத்திக்கொலை செய்துள்ளார். கணவன், மனைவி இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர். மனைவியை கொலை செய்த தகவலை கணவனே நேரலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.