
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தேர்தல் மற்றும் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு கொடுத்த செங்கோட்டையனின் கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு அணி உருவாகும் நிலை உள்ளது. இதில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக தலைமை கூறி வரும் நிலையில், அதை ஏற்க முடியாது என்று டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். அப்படிப்பட்ட டி.டி.வி.தினகரரை அண்ணாமலை ஏன் சந்தித்தார் என்ற கேள்வி பாஜகவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள ஜெ.பி. நட்டாவின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை தேசிய தலைவரிடம் சமர்பித்தார் என்று கூறப்படுகிறது. அக்டோபர் இரண்டாவது வாரம் தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆனால், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்தது அண்ணாமலை, டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியது குறித்து விவாதிக்கத்தான் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜக அரசியலில் நடக்கும் உள்கட்சி மோதல்களை தவிர்க்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே வலியுறுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை தனி ட்ராக்கில் பயணிப்பதாக நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அது குறித்த புகாரைத்தான் நயினார் டெல்லி தலைமையிடம் வழங்கியிருப்பார் என்ற தகவல்கள் பாஜகவில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.