
தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து அதை விபத்தாக மாற்ற மனைவி முயற்சி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேஹா. திருமணமானதில் இருந்து கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நாகேஷ்வரின் உடல் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து 24 கி.மீ தொலைவில் கிடந்தது. அவரது கால்களில் காயங்கள் இருந்தன. அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நேஹாவிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது, தனது கணவர் இரவு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகவும், வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், நேஹாவை பிடித்து அவர்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது தனது காதலன் ஜிதேந்திராவுடன் சேர்ந்து தனது கணவர் நாகேஷ்வரை கொலை செய்ததை நேஹா ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது, நேஹாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகியுள்ளனர். ஏற்கெனவே நாகேஷ்வருக்கும், நேஹாவிற்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவது தெரிய வந்தது. அத்துடன் விவகாரத்து தர முடியாது என்று நாகேஷ்வர் கூறி வந்துள்ளார். இதனால் அவரை ஜிதேந்திராவுடன் இணைந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக தனது கணவரை தனது கணவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் மயங்கும் அளவிற்கு நேஹா மது ஊற்றிக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜிதேந்திரா உதவியுடன் தனது கணவர் நாகேஷ்வர் கழுத்தை நெரித்ததுடன், ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இதன்பின் அவரது உடலை ஜிதேந்திராவுடன் பைக்கில் கொண்டு சென்று 25 கி.மீ அப்பால் கொண்டு சென்று சாலையில் வீசியுள்ளார். விபத்தில் நாகேஷ்வர் இறந்தது போல மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அவரது உடலை சாலையில் நேஹா வீசியுள்ளார். ஆனால், காதலன் பைக் ஓட்ட நடுவில் நாகேஷ்வரை வைத்துக் கொண்டு நேஹா சென்றுள்ளார். அப்போது தரையில் கால்கள் உரசி காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் தான் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேஹாவையும், அவரது காதலன் ஜிதேந்திராவையும் போலீஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நாகேஷ்வர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் ஜிதேந்திராவுடன் நேஹாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது எல்லை மீறிய நட்பாக மாறியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த நாகேஷ்வர், தனது மனைவி நேஹாவிற்கும், ஜிதேந்திராவிற்கும் இருக்கும் தொடர்பை தெரிந்து கண்டித்துள்ளார். இந்த நிலையில் தான் தனது காதலனுடன் சேர்ந்து நேஹா தனது கணவரை கொலை செய்து விபத்து நாடகமாடியுள்ளார் என்றனர். காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்து விபத்து போல மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.