
சினிமாவிற்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் என திரையுலகோடு சம்பந்தப்பட்டவர்கள் தமிழக அரசியலில் மையப்புள்ளிகளாக திகழ்கின்றனர். இந்த ஆசை நடிகர் விஜய்யையும் விடவில்லை. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியவர், இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் சமீபத்தில் நடத்தினார்.
அது தனி ஸ்டைல்
கட்சி ஆரம்பித்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது தான் வழக்கம். ஆனால், நடிகர் விஜய்யோ, கொஞ்சம் வித்தியாசமானவர். பாதிக்கப்பட்டவரோ, உதவி பெற வேண்டியவரோ, போராட்டம் நடத்துபவர்களோ யாராக இருந்தாலும் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்கு வரச்சொல்லித்தான் விஜய் சந்திப்பார். மக்களை நேரடியாக சந்திக்காத தலைவர் எப்படி எதிர்க்கட்சியை களத்தில் சந்திப்பார் என்று மக்கள் கேள்வி கேட்காமல் இல்லை.
திருச்சியில் பிரசாரம்
இந்த நிலையில், செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் மக்களைச் சந்திக்கிறேன் என்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடக்கினார். ஆனால், எந்த திட்டமிடலும் இல்லை. திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9.40 மணியளவில் வந்தவர், 9.45 மணிக்கு வெளியே வந்தவர் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த நவீன வசதிகள் கொண்ட வாகனத்தில் ஏறி அமர்ந்தார். ஆனால், விமான நிலைய வாசலில் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல் துறையில் வழங்கிய கடிதத்தில், விஜய் பிரசாரத்தை காலை 10.35 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விமான நிலையத்தில் இருந்து மரக்கடை வரை குவிந்திருந்த தவெக தொண்டர்கள் விஜய் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. கல்வி நிலையம் செல்பவர்ள், வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவமனை செல்வபவர்கள் என இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தங்கள் கொண்டு வந்த வாகனங்களை சாலையில் நிறுத்தி தவெக தொண்டர்கள் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால் திருச்சி-புதுக்கோட்டை சாலை முற்றிலும் முடங்கியது.
தவித்துப்போன மக்கள்
நடிகர் விஜய்யின் முதல் தேர்தல் பிரசாரம் என்பதால், மாநிலம் முழுவதும் இருந்து ஆட்களை திரட்டியதால் திருச்சி மரக்கடை பகுதி முற்றிலும் ஸ்தம்பித்து போனது. 11 பேருக்கும் மேல் மயங்கி விழுந்தனர். திருச்சி மாநகர காவல் துறை விதித்த 23 நிபந்தனைகளையும் தவெகவினர் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தவெக தொண்டர்களால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதி அடைந்தனர். வழக்கம் போல, தொலைக்காட்சி நேரலைகளில் திருச்சியில் கூடிய கூடடத்தைப் பார்த்தீர்களா, திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என சிலர் பேசிக்கொண்டிருந்தனர். நடிகர் விஜய் திருச்சியில் ஒரு கட்சித் தலைவராக மேற்கொண்ட பிரசாரம் எப்படி இருந்தது என்பதை மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமு எப்படி பார்க்கிறார் என்று பாருங்கள்.
வைகோ நடத்திய பேரணி
“விஜய்யின் வாகனம் மெதூதூ…. வாக ஊர்ந்து செல்கிறது, நான்கு கி.மீ. தூரத்தை கடக்க இரண்டு மணி நேரம் ஆகிறது” என்று வியக்கிறார்கள். இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. விஜய்க்கு கண்டனம்தான் தெரிவிக்க வேண்டும். அவர், தொண்டர்களை ஒதுங்கி நிற்கச் சொல்லி வாகனத்தில் இயல்பான வேகத்தில் சென்றால் இத்தனை பிரச்னைகள் கிடையாது. ஆனால், மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் வரட்டும் என காவல்துறை சொன்னதை ஏற்ற விஜய், அதை தொண்டர்களுக்கு கடத்த விரும்பவில்லை.
சிபிஎம் மாநாடு
அதனாலேயே மேலும் பல இடங்களில் இருந்து ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள். இதனால் மருத்துவனைக்குச் செல்வது உள்ளிட்ட அவசிய விஷயங்களுக்குச் செல்லும் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம். 1994-ல் இதே திருச்சியில், மதிமுகவின் (முதல் பேரணி) நடந்தது. முதல் நாள் மாலை துவங்கிய ஊர்வலம், மறுநாள் காலையில்தான் திடலை அடைந்தது.
ஆனால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. அக்கட்சியின் பொ.செ. வைகோ, பாரம்பரிய அரசியல் தலைவர், அந்தக் கட்சித் தொண்டர்களும் அரசியல் புரிதல் உள்ளவர்கள். ஆகவே, பிரச்னை ஏற்படவில்லை.பல வருடங்களுக்கு முன் கடலூரில் நடபெற்ற சி.பி.எம். மாநாட்டுக்குச் சென்றேன். லட்சக்கணக்கானவர்கள் கூடினர். ஆனால், பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை.
சினிமா வசனம் பேசிய விஜய்
ஒரு யூடியுப் சேனலில் பார்த்தேன். விஜய்யுடன் சிறு வேடத்தில் நடித்தவர், “அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ரசிகர்கள் ஏராளமாக வந்துவிட்டார்கள். விஜய், ‘நான் கையைத் தூக்கின உடனே, ரசிகருங்க கத்துவானுங்க பாரேன்’ என்றார். அதே போல அவர் கையைத் தூக்கிக் காண்பித்ததும் ரசிகர்கள் கோசமிட்டனர்” என்றார் அந்த நடிகர். இதிலிருந்து விஜயின் மனநிலையை அறியலாம். “கருத்துக்களைப் பேச மாட்டேன், ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்.” என்பதே விஜய்யின் மனநிலை. தற்போதைய திமுக அரசை விமர்சிக்க எவ்வளவோ விஷயங்கள் உண்டு.
விஜய் ஆபத்தானவர்
“வெள்ளிக்கிழமை ராமசாமி போல, சனிக்கிழமை பொலிட்டீசியனாக இருப்பேன்” என்பதும் சரியில்லை. ஆங்கிலத்தில், “சண்டே சின்ட்ரோம்” என்பார்கள். அது போல இருக்கிறார். அரசியல்வாதிகளில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. அவர்களில் நான் மிகக் கடுமையாக விமர்சித்தது விஜயகாந்தைத்தான். அவரை மக்கள் நலக்கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தபோதும் கடுமையாக விமர்சித்தேன். ஆனால் விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல. ஆனால், ஆனால்… விஜய் அப்படிப்பட்டவர் அல்ல என்று தனது முகநூல் பக்கத்தில் டி.வி.சோமு பதிவிட்டுள்ளார்.
கனவு காணும் விஜய்
அரசியல் நுழைந்து மக்களுக்குச் சேவையாற்றுபவர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வயதையும் பொருட்படுத்தாமல் கடுமையான வெயிலிலும் தொடர்நது தமிழ்நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு அலுவல்கள், கட்சிப்பணிகளுக்கு இடையே ஒவ்வொரு ஊராகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். ஆனால், திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் இந்த தேர்தலில் நேரடி போட்டி எனக்கூறும் விஜய், சனிக்கிழமையன்று மட்டும் தான் பிரசாரத்திற்கு வருவேன் என்பதெல்லாம் டூமச். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதெல்லாம் கனவு என்கிறார்கள் பொதுமக்கள்.