
15 லட்ச ரூபாய் இழப்பீடு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கணவரை விஷம் வைத்து கொலை செய்து விட்டு புலி தாக்கியதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் சிக்கஹெஜ்ஜூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி(45). இவரது மனைவி சல்லாபுரி(41). இவர்கள் இருவரும் பாக்கு வயல்களில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், தனது கணவரை புலி அடித்துக் கொன்று உடலை இழுத்துச் சென்றதாக சல்லாபுரி கூறினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஹினாசுரு போலீஸாரும், வனத்துறையினரும் வெங்கடசாமி உடலைத் தேடினர். ஆனால், கனமழை காரணமாக புலியின் தடங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. வனத்துறையினருடன் சேர்ந்து காட்டுக்குள் சல்லாபுரியும் தனது கணவரைத் தேடி அலைந்தார்.
இந்த நிலையில், சல்லாபுரி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி அவரிடம் விசாரணை நடத்திய போது, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுச் சாணக்குவியலுக்குள் வெங்கடசாமியின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் போலீஸார் மட்டுமின்றி ஊர் மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக சல்லாபுரியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் வெங்கடசாமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்து உடலை மறைத்து வைத்ததாக சல்லாபுரி கூறினார். காட்டு விலங்குகள் தாக்கினால், குறிப்பாக புலி தாக்கினால் அதனால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசு 15 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் என்ற ஊர்மக்கள் கூறியதால், அந்த தொகையைப் பெற கணவரை கொலை செய்ததாக சல்லாபுரி கூறியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்ததுடன், வெங்கிடசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 15 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற ஆசையில் கணவரை மனைவியே விஷம் வைத்துக் கொலை செய்த சம்பம் மைசூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.