
உசிலம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையோர மரத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் இன்று அதிகாலையில் சாலையோர மரத்தில் மோதி கார் ஒன்று விபத்திற்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காரில் இருந்த தேனி மாவட்டம், கடமலைக்குண்டு காவேரி தோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி மாயகிருஷ்ணம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
மேலும், காரில் இருந்த சுருளியம்மாள், விஜயபாரதி, சித்ரா, ஷர்வீன், அசோக்குமார் ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்திருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர்கள் ஐந்து பேரும், தேனி மாவட்டம், கா.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிவகாசியில் இருந்து தேனி நோக்கி கார் சென்ற போது இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. உயிரிழந்த தம்பதியர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடைபெற்ற விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.