
சீனாவிலிருந்து திபெத் வழியாக டெல்லிக்கு ரூ.800 கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் கடத்தி வந்த மூன்று பேரை இந்தோ- திபெத் எல்லை காவல்துறை கைது செய்துள்ளது.
லடாக்-சீன எல்லையில் ரூ.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை எடுத்துச் சென்ற 2 பேரை கைது செய்ததன் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. சீனாவிலிருந்து திபெத் வழியாக தங்கம் வந்து, லடாக்கில் பெறப்பட்டு, பின்னர் டெல்லி நகைக்கடைக்காரர்களுக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தோ-திபெத் எல்லை காவல்துறை (ஐடிபிபி) கைது செய்த ஒரு தங்க கடத்தல் கும்பல், ரூ.800 கோடி மதிப்புள்ள சுமார் 1,064 கிலோ தங்கத்தை கடத்தியுள்ளது. கடந்த 2023 மற்றும் 2024- ஆண்டுக்கு இடையில், இந்த தங்கம், ஒரு சீனாவைச் சேர்ந்த ஒருவரால் எல்லைக்கு அப்பால் இருந்து அனுப்பப்பட்டுள்ளது, பின்னர் இந்திய மூளையாக செயல்பட்ட டெண்டு தாஷியின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லியில் உள்ள டீலர்களுக்கு மாற்றப்பட்டது.
மேலும், சீனாவிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தைப் பெற்றதாகக் கூறப்படும் டெல்லியில் உள்ள டீலர்கள் மற்றும் நகைக்கடைக்காரர்களின் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளின் கீழ், லடாக்கில் உள்ள தாஷியுடன் தொடர்புடைய வளாகங்களிலும் இந்த நிறுவனம் சோதனைகளை நடத்தியது. அவர்களிடம் ரூ.80 கோடிக்கு மேல் மதிப்புள்ள 108 தங்கக் கட்டிகள் இருந்தன. அவை சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக காபிபோசா சட்டத்தின் மீழ் 10 பேர் கைது செய்யப்பட்டனர். 2023 மற்றும் 2024 -ம் ஆண்டுகளில் டெண்டு தாஷி தனது தங்க கடத்தல் கும்பலின் மற்ற உறுப்பினர்களின் உதவியுடன் சீன எல்லையிலிருந்து ரூ.800 கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு வெற்றிகரமாக கடத்தியுள்ளது என்று கூறியுள்ளது.