
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் வெளியிட்டுள்ளார்.
இன்று காலை முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல செப்டம்பர் 11-ம் தேதி சிவகங்கை மாவட்டத்திலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 20-ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.