
மதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. மதிமுகவில் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சி பணிகளில் இருந்து மல்லை சத்யா ஒதுங்கியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், எல்டிடிஈ தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளரான வைகோ திடீரென குற்றம் சாட்டினார். இதனால் வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் உரசல் ஆரம்பமானது. தன்னை துரோகி என்று அழைத்தற்கு பதில் விஷம் கொடுத்திருந்தால் அதை குடித்து விட்டு இறந்திருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார். அத்துடன் மக்கள் மன்றத்தில் நீதிகேட்டு உண்ணாவிரதமும் இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மதிமுகவில் தன்னை ஓரங்கட்ட வைகோவும், துரை வைகோ தொடர்ந்து முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் மல்லை சத்யா பரபரப்பாக பேட்டியளித்தார். இதனால் மதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மதிமுகவில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அத்துடன் கடந்த 17-ம் தேதி விளக்கம் கேட்டு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நிரந்தரமாக மல்லை சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.