
ஆக்கபூர்வமாக பேசிக் கொண்டிருக்கும்போது அக்கப்போரான விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம் என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். எட்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை தமிழ்நாட்டிற்குத் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும் 17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணங்கள் மூலமாக அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வெற்றிகரமான பயணமாக அமைந்தது.
தந்தை பெரியார் படத்தை ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தது பெருமை. முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சராக மட்டுமல்லாமல் திராவிட இயக்க தலைவராக, பெரியாரின் பேரனாக, தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் மறக்க முடியாததாக உள்ளது. அதே சமயம் சிலரால் இதை பொறுக்க முடியவில்லை.
தமிழ்நாடு கொண்டிருக்கும் மனித வளம் உட்கட்டமைப்பு, சலுகைகள், வெளிப்படையான அரசு நிர்வாகம் இப்படியான தகவல்களை முதலமைச்சராக நானே எடுத்துச் செல்கிறேன். இது போன்ற வெளிநாட்டு பயணங்கள் மேலும் தொடரும் என்றார். அவரிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஆக்கபூர்வமாக பேசிக் கொண்டிருக்கும்போது அக்கப்போரான விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.