
குடும்பத் தகராறில் தனது 2 மகள், ஒரு மகனை உயிருடன் எரித்துக் கொலை செய்த தந்தை, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் வேல்தண்டா காவல் நிலையப்பகுதியில் 36 வயதான ஆணின் பிணம் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ஆணின் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அருகில் கிடந்த பைக்கின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர் ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த உரக்கடை உரிமையாளர் குட்டா வெங்கடேஸ்வர்லு என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், நாகர்கர்னூல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுமிகள், 4 வயது சிறுவன் உடல்கள் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அந்த உடல்களைக் கண்டெடுத்த போலீஸார், குட்டா வெங்கடேஸ்வர்லு குடும்பத்தைத் தொடர்பு கொண்ட போது, தனது மூன்று குழந்தைகளுடன் அவர் பைக்கில் சென்றதாகவும், கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் கூறினர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது குட்டா வெங்கடேஸ்வர்லு பிரகாசம் மாவட்டத்தில் பெத்தபோயப்பள்ளியில் உரக்கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரது மனைவி தீபிகா. இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆக.31-ம் தேதி தனது மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு பைக்கில் குட்டா வெங்கடேஸ்வர்லு ஆந்திரா மாநிலத்தை விட்டு கிளம்பியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உப்பனுதலா மண்டலத்தில் உள்ள சூர்யதண்டா அருகே இளைய மகளையும், மகனையும் பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அச்சம்பேட்டை அருகே தண்டராவில் தனது மூத்த மகளை எரித்துக் கொலை செய்துள்ளார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வேல்தண்டா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அருகே கிடந்த பைக் எண்ணை வைத்து அவர்களது குடும்பத்தைத் தொடர்பு கொண்டோம். அப்போது மூன்று குழந்தைகளுடன் குட்டா வெங்கேடஸ்வர்லு கிளம்பியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹாஜிபூரில் உள்ள சிசிடிவி காசிகளில் வெங்கடேஸ்வர்லு மூன்று குழந்தைகளுடன் பைக்கில் சென்றது பதிவாகியுள்ளது. அடுத்து வேல்தூரில் கிடைத்த சிசிடிவி காட்சிகளில் எட்டு வயது மகளுடன் குட்டா வெங்கடேஸ்வர்லு சென்றது தெரிய வந்தது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்திய போது தான் 2 குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றினோம். அதன் பின் மூத்த மகளின் உடலை மீட்டோம் என்றார்.
தனது மூன்று குழந்தைகளைக் கொன்று விட்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து குட்டா வெங்கடேஸ்வர்லு தற்கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அவரது சகோதரர் மல்லிகார்ஜுன ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், வேல்தண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் மூன்று குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொலை செய்து விட்டு உரக்கடை உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.