
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1,789 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1,738 ரூபாயாக குறைந்துள்ளது.
இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதே சமயம், சென்னையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.