
426 மாணவர்கள் சாப்பிடும் உணவில் விஷத்தைக் கலந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பகேலா கிராமத்தில் அரசு குடியிருப்பு போர்டோ கேபின் பள்ளி உள்ளது. இப்பள்ளியை ஒட்டியே விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் 426 மாணவர்கள் தங்கி கல்வி கற்று வந்துள்ளனர். இந்த மாணவர்கள் சாப்பிடும் உணவில் ஒருவித வாசனை வருவதை ஒரு ஊழியர் கண்டுபிடித்தார். அத்துடன் அந்த உணவு அருகே பினாயில் பாட்டிலும் கிடந்துள்ளது. அதனால் மாணவர்கள் சாப்பிடும் உணவில் யாரோ பினாயில் கலந்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக விடுதி கண்காணிப்பாளர் துஜால் படேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த உணவை சோதனை செய்த போது அதில் பினாயில் கலந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த உணவை அப்புறப்படுத்த அவர்கள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தனஞ்சய் சாஹு என்ற ஆசிரியை தான் இந்த சதிச்செயலுக்கு காரணம் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டு முன்பு வரை விடுதியின் கண்காணிப்பாளராக அவர் தான் இருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நேரத்தில், அவர் ஒரு மாணவரை அடித்ததில் படுகாயமடைந்துள்ளார். இதன் காரணமாக, சாஹு கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு துஜல் படேலுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த முடிவால் சாஹு கோபமடைந்தார், அன்றிலிருந்து படேல் மீது முன் விரோதம் இருந்துள்ளது. மாணவர்கள் சாப்பிடும் உணவில் விஷத்தன்மை உள்ள எதையாவது கலந்து கொண்டால் படேல் பதவி பறிக்கப்படும் என்று திட்டமிட்டு 426 மாணவர்கள் சாப்பிடும் உணவில் தனஞ்சய் சாஹு பினாயில் கலந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து சிந்த்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து தனஞ்சய் சாஹு கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 109 (கொலை முயற்சி) உட்பட பல கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனி மனித விரோதத்தில் இத்தனை குழந்தைகளின் உயிரோடு விளையாடிய ஆசிரியை தனஞ்சய் சாஹு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.