
மகாராஷ்டிராவில் 7 வது மாடியில் இருந்து குதித்து பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் சரிதா கான்சந்தானி. பிரபல வழக்கறிஞரான இவர் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அத்துடன் ஹிராலி அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வந்தார், மேலும் உல்ஹாஸ்நகர் வழியாக பாயும் உல்ஹாஸ் மற்றும் வால்துனி நதிகளைச் சுத்தம் செய்வதற்காக தொடர்ந்து பிரசாரம் செய்தார். காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு எதிராகவும் அவர் குரல் எழுப்பினார். இந்த முயற்சிகள் காரணமாக, உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களின் அதிருப்தியை அவர் பல முறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நிலையில், அவர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7வது மாடியில் இருந்து சரிதா குதிப்பதற்கு முன்பு கைகளைக் கூப்பி கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார். அதன் பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சரிதா கான்சந்தானி தனது அலுவலகத்திற்குப் பின்புறம் ஒரு அறையை ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த அறையைக் காலி செய்வது தொடர்பாக சரிதாவிற்கும், அந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் சரிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் சரிதா புகார் அளித்துள்ளார். விட்டல்வாடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து இப்புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன் சரிதாவையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த வழக்கறிஞரான சரிதா கான்சந்தானி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தானே போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.